ரவுடி சுட்டுக்கொலை: மதுரை காவல்துறை அதிரடி!

காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் (என்கவுன்டர்) பிரபல ரவுடி சுபாஷ் சந்திர போஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையில், ரிங் சாலையில் இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நிகழ்ந்தது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகின்றன.

இதையடுத்து காவல்துறையின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

குற்றவாளிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ரவுடி சுபாஷ் சந்திர போஸ் மீதான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருந்தது.

எனவே, அவரைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மதுரை காவல்துறை முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் பதுங்கியுள்ள அவரைக் காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது, அவர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நீடித்து வருகிறது.

ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் மதுரையின் சில பகுதிகளில் திங்கட்கிழமை பதற்றம் நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.