யாழ்ப்பாண விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசு இலக்கு.

யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளில் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதற்கு பலாலி விமான நிலையம் என்ற பெயரும் உண்டு.
இலங்கையின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க அண்மையில் யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது விமான நிலையத்தின் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த ஊழியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
நடப்பில் உள்ள வசதிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகள், அம்சங்கள் ஆகியவற்றை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
யாழ்ப்பாண அனைத்துலக விமான நிலையத்தைப் பயன்படுத்த உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகள் பலர் விரும்புவதாகச் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரத்னாயக்க கூறினார்.
“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணிகள் தற்போது கொழும்பில் உள்ள காட்டுநாயக்க விமானத்தைப் பயன்படுத்துகின்றனர். யாழ்ப்பாண அனைத்துலக விமானத்தை மேம்படுத்தி அவர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்த இலக்கு கொண்டுள்ளோம். இதற்கு இலங்கையின் விமானப் போக்குவரத்துச் சட்டங்களைத் திருத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
“போரின் காரணமாக பேரளவில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களின் பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க இந்த விமான நிலையத்தின் மேம்பாடு அடித்தளமாக அமையும். மேம்பாட்டுப் பணிகளுக்குத் தேவையான நிதி இருப்பதாக விமான நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அனைத்துலக தரம் கொண்ட விமான நிலையமாக அது உடனடியாக உருமாற்றப்பட வேண்டும்,” என்று அமைச்சர் ரத்னாயக்க கூறினார்.