போதைப்பொருள் கடத்தல்காரர் வைத்திருந்த T-56 துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் மீட்பு!

நேற்று (01) காலை வத்தளை பொலிஸ் பிரிவின் ஹெகித்த சாலை வத்தளை பகுதியில் உள்ள விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும் , பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட விடுதியின் அறையில் ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் பேரில் வத்தளை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணை நடத்திய அதிகாரிகள், விடுதியின் குளியலறையில் ஒரு பெண் மயக்க நிலையில் இருப்பதை கண்டனர்.
அந்த பெண்ணை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சோதனையிட்டதில் 06 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய மேலதிக விசாரணையில், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் விநியோகிப்பவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல் அளித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து நடத்திய மேலதிக விசாரணையில், போதைப்பொருள் கடத்தல்காரர் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவரிடம் கொடுத்த T-56 துப்பாக்கி மற்றும் 113 தோட்டாக்களை வேறு இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்படி, சந்தேக நபரின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்ட அதிகாரிகள், அவர் வசிக்கும் இரண்டாவது கணவர் வசிக்கும் ராகம பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மீட்டனர்.
அந்த T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹீன்கெந்த, ராகம வீட்டில் வசிக்கும் சந்தேக நபரின் 40 வயது கணவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான பெண் சந்தேக நபர் 35 வயது கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவராவார்.