மியான்மர் சோகம் 2000 மரணங்களை தாண்டியது.. பிண வாடை நாடு முழுவதும் பரவுகிறது.!

மியான்மர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 2,056 ஆக உயர்ந்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு மத்திய மியான்மரில் 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் மண்டலை நகரை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 270 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மர் ராணுவ அரசு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தகவல் தொடர்பு அமைப்புகள் செயலிழந்ததால் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாகக் கூற முடியவில்லை என்றும், அது தற்போதுள்ள எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் வரை உயரக்கூடும் என அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஏராளமானோர் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களை மீட்க ராணுவம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் இரவு பகலாக தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மண்டலை நகருக்கு அருகே உள்ள சாகேன் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்கள் மற்றும் சடலங்களால் நிரம்பி வழிவதாகவும், சடலங்களின் நாற்றம் நகரங்கள் முழுவதும் பரவியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தற்காலிக கூடாரங்களை அமைத்து சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை என்றும், யாங்கூன் உள்ளிட்ட அருகிலுள்ள நகரங்களின் சந்தைகளில் சடலப் பெட்டிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலை நகர் மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச அளவில் 8 மில்லியன் அமெரிக்க டாலர் அவசரகால நிவாரண உதவி கோரியுள்ளது. பல நாடுகளில் இருந்து தற்போது நிவாரண உதவிகள் வந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்கு உதவ பல வெளிநாட்டு ராணுவ குழுக்களும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.