ஹைட்டி சிறைச்சாலைக்குள் புகுந்து 500 கைதிகளை விடுவித்த குண்டர் கும்பல்.

கரீபிய நாடான ஹைட்டியின் மிரெபலைஸ் நகரில் சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 500 கைதிகளை வெளியேற்றியுள்ளனர்.
பொர்ட-உ- பிரின்ஸ் தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மிரெபலைஸ் நகரில் கூடுதல் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக ஹைட்டி தேசியக் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை அதிகாரிகள் மிரெபலைஸ் நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் சிறையிலிருந்து தப்பித்த கைதிகள் பொது இடங்களில் சுற்றித் திரிவதாக உள்ளூர் தகவல்கள் கூறின.
ஆயுதமேந்திய குண்டர் கும்பல்கள் தலைநகரை ஏறக்குறைய தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். தற்போதைய தாக்குதல் மூலம் அருகில் உள்ள இதர நகரங்களையும் அவர்கள் கைப்பற்ற முயல்வதாகக் கருதப்படுகிறது.
அதிகமான ஆயுதங்களை வைத்திருக்கும் ஆடவர்கள் கட்டடங்கள்மீதும் பாதசாரிகள்மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உள்ளூர்வாசிகள் கூறினர். அவர்கள் கட்டடங்களுக்கும் கார்களுக்கும் தீ மூட்டியதால் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்ளூர்க் காவல் நிலையத்தைச் சூறையாடியதோடு சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்தனர். அங்கிருந்த 500 கைதிகளை அவர்கள் விடுவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. அவற்றுள் ஒன்று ‘400 மவோஸோ’. மற்றொரு குழு தன்னை ‘தலிபான்’ என்று அழைக்கிறது.
‘400 மவோஸோ’ கும்பல் ஆள்கடத்தலுக்குப் பிரபலம். அந்தக் கும்பல் தலைநகருக்குச் சென்றுவரும் பேருந்துகளை அதிகம் குறிவைக்கும்.
குண்டர் கும்பல் ஆளும் பகுதிகளின் கட்டுப்பாட்டை ஹைட்டி தேசியக் காவல்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் பெற்றுத்தர பன்னாட்டுப் படைகள் உதவிவருகின்றன.