மியன்மார் நிலநடுக்கம்: உதவிக் குழுக்களை நோக்கி ராணுவம் துப்பாக்கிச்சூடு

மோசமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில் உதவிப் பொருள்களைக் கொண்டு சென்ற குழுவை நோக்கி அந்நாட்டின் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த அக்குழு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப் பொருள்களைக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவைப் பற்றித் தங்களுக்குத் தகவல் அளிக்கப்படவில்லை என்று மியன்மார் ராணுவ அரசாங்கத்தின் தலைவர் மின் ஆவ்ங் ஹ்லாய்ங் கூறினார்.
முன்னதாக அவர், அந்நாட்டின் கிளர்ச்சிப் படைகள் முன்வைத்துள்ள போர் நிறுத்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் கைகொடுக்க கிளர்ச்சிப் படைகள் முயற்சி செய்துவருகின்றன.
அதனையடுத்து சம்பந்தப்பட்ட கிளர்ச்சிப் படைகள் போர் நிறுத்தப் பரிந்துரைகளை முன்வைத்தன. மியன்மாரில் தொடரும் உள்நாட்டுப் பூசலால் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சியின் பங்காளிகளான மியன்மாரின் ஜனநாயக ஆதரவு அமைப்பு, அந்நாட்டின் மத்தியப் பகுதியை நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் போரை நிறுத்துவதாக அறிவித்தது. நிலநடுக்கத்தில் குறைந்தது 2,700 பேர் பலியாகிவிட்டதாக அந்நாட்டு ராணுவ அரசாங்கத்தின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, மியன்மார் அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டு கணிசமான அளவில் பகுதிகளைக் கைப்பற்றிய வேறு சில கிளர்ச்சியாளர்களும் ஒரு மாத காலத்துக்குப் போரை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
“சில உள்ளூர் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் தற்போது சண்டையில் ஈடுபடவில்லை. அதேவேளை, வருங்காலத்தில் தாக்குதல் நடத்த அவை தயாராகிவருகின்றன, பயிற்சி நடத்திவருகின்றன,” என்று மின் ஆவ்ங் ஹ்லாய்ங், தலைநகர் நேப்பிடோவில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) நடந்த நிதி திரட்டு நிகழ்ச்சியில் சொன்னார்.
“அவர்களின் நடவடிக்கைகள் தாக்குதல்களாகத்தான் வகைப்படுத்தப்படுகின்றன. அதனால் ராணுவம் தொடர்ந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அவர் கூறியதாக மியன்மார் அரசாங்கத் தரப்பிலிருந்து செய்தி வெளியானது.
கடந்த 2021ஆம் ஆண்டு, மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிலிருந்து மியன்மாரில் உள்நாட்டுப் பூசல் நான்கு ஆண்டுகளாகத் தொடர்கிறது.
மின் ஆவ்ங் ஹ்லாய்ங்கின் தற்போதைய கருத்துகள், நிலவரம் அதிகம் மேம்பட வாய்ப்பில்லை என்ற உணர்வைத் தருவதாக நம்பப்படுகிறது.
எதிரி முகாம்கள் மீது தனது ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஆனால் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது பதில் நடவடிக்கைகளை மட்டுமே எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
‘மீட்புப் பணியாளர்கள் கூடுதல் பகுதிகளுக்குச் செல்ல வழிவகுக்கவேண்டும்’
இதற்கிடையே, நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தோருக்கு உதவ மியன்மாரின் ராணுவ அரசாங்கம், அனைத்துலக உதவிப் பணியாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவேண்டும் என்று உதவி மற்றும் மனித உரிமைக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் உதவிப் பணியாளர்கள் சென்றடைய ராணுவம் வகைசெய்யவேண்டும் என்று அவை வேண்டுகோள் விடுத்துள்ளன.