மோடியின் இலங்கை பயணம்: முக்கிய நிகழ்வுகள் என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத் திட்டம் குறித்து நேற்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ விளக்கினார்.
அவர் தனது விளக்கத்தை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது வழங்கினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார். 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களிலும் அந்த பயணத்திற்கான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளன. ஏப்ரல் 5 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இந்திய பிரதமரும் ஜனாதிபதியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து ஊடகங்களுக்கு பேசுவார்கள்.
சாம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் மற்றும் சில மத வழிபாட்டு தலங்களுக்கு சூரிய மின் அமைப்புகளை வழங்குதல் மற்றும் தம்புள்ளை குளிர்பதன கிடங்கு திறப்பு ஆகியவை கொழும்பில் இருந்து அன்றைய தினம் நடைபெறும்.
ஏப்ரல் 6 ஆம் திகதி அவர் அனுராதபுர ஸ்ரீ மகா போதியை தரிசிக்க செல்கிறார். அங்கு அனுராதபுரத்தில் தற்போதுள்ள ரயில் சமிக்ஞை அமைப்பைத் தொடங்குதல் மற்றும் ரயில் பாதையைத் திறத்தல் ஆகியவை நடைபெறும். இதுதான் தற்போதுள்ள திட்டம்.
சக்தி, சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல இருதரப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து தகவல்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போதும், அதற்குப் பின்னரும் கலந்துரையாடப்படும்.