இந்தியா, சீனா இடையிலான உறவு வலுப்பட வேண்டும்: ஸி ஜின்பிங் விருப்பம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் தொடங்கி செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 1) 75வது ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து இருநாட்டுத் தலைவர்களும் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா, சீனா இடையிலான உறவு வலுப்பட வேண்டும் என சீன அதிபர் ஸி ஜின்பிங் விருப்பம் தெரிவித்திருப்பதாக ராய்ட்ர்ஸ் செய்தி கூறியது.

இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடம் தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட சீன அதிபர் இரு நாடுகளும் மேலும் அணுக்கமாகவும் இணைந்தும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே இமயமலையை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் மோதல் வெடித்தது. அப்போது இரு தரப்பு ராணுவங்களும் எல்லையில் படைகளைக் குவித்தன. அதன் பிறகு தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் ஓரளவு பதற்றம் தணிந்ததை அடுத்து, தற்போது இருதரப்பும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு இருதரப்பு உறவு மேம்பட்டுள்ளது.

ஸி ஜின்பிங், திரௌபதி முர்மு ஆகியோரைத் தவிர, சீனப் பிரதமர் லி சியாங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இதற்கிடையே சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், இந்தியாவும் சீனாவும் பண்டைய நாகரிகங்களைக் கொண்ட, உலகளாவிய நிலையில் வளரும் நாடுகள் என்று குறிப்பிட்டார்.

தற்போது இருதரப்பு ஒத்துழைப்பானது நன்மை பயக்கும் வகையில் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், இதுவே இரு நாடுகளுக்கும் உகந்த பாதை என்றார்.

கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது ரஷ்யாவில் பிரதமர் மோடியும் சீன அதிபரும் சந்தித்தனர். இது இருதரப்பு உறவுகளுக்கு நல்ல வழிகாட்டுதலை வழங்கியது. இரு நாடுகளும் தங்கள் தலைவர்களின் ஒருமித்த கருத்தை தீவிரமாகச் செயல்படுத்தி, நேர்மறையான விளைவுகளுடன் கூட்டுறவு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன,” என்றார் குவோ ஜியாகுன்.

சீனா- இந்தியா இடையே நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவது, கைலாஷ் மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இரு நாடுகளும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.