முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய நியமனக்கடிதங்கள் காதர் மஸ்தான் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப “வறுமையற்ற இலங்கை” என்ற எண்ணக்கருவிற்கு அமைய ஒரு இலட்சம் பேருக்கான தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பயிலுனர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று (25)ஞாயிறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 18 பேருக்கும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 11 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 09 பேரும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 06 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 05பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 05 பேருக்குமாக 54 பேருக்கான அரச நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உபதவிசாளர் மகேந்திரன் மற்றும் கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தவர்கள், எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் மூலம் விதிமுறையான நடைமுறைகளுக்கு அமைய இவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனங்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 06 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப் பயிற்சிகளுக்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபையின்(NATIA) பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய ஆறு மாதங்கள் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியினை நிறைவுசெய்யும் பயிலுனர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பணிக்காக நியமிக்கப்படுவர்.
மேலும் பயிற்சிக் காலத்தின் போது இவர்களுக்கு 22500 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.