தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க , தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் விரும்புவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றை பேரவையில் அவர் தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும் இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும் கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்தியப் பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

“கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது, ஏற்கமுடியாதது,” என்றார் ஸ்டாலின்.

Leave A Reply

Your email address will not be published.