தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளாலேயே ஆயுதம் ஏந்தினர் வடக்கு இளைஞர்கள்! மீண்டும் அவ்வாறு ஏற்படக்கூடாது!

“பல வருடங்களாகத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாகவே, வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எனவே, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு இடம்கொடுக்காத வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போர் என்பது துரதிஷ்டவசமானது. போர் நடைபெற்றமை தொடர்பில் நான் இன்றளவிலும் கவலைப்படுகின்றேன். ‘போர் வெற்றி’ என்ற வார்த்தையை எமது கட்சியினர் பயன்படுத்துவதில்லை. ‘போர் முடிந்த பின்னர்’ என்ற வசனத்தைதான் பாவிப்போம்.
இரு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன்போது, அவர்கள் (புலிகள்) ஏன் போராளிகளாக மாறினார்கள் என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும். இதற்கு 1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதிகளையும் நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். பல வருடங்களாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் காரணமாகத்தான் வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
எனவே, மீண்டும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருப்பது தொடர்பிலேயே தற்போது நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஏற்பட்ட வடுக்களை எவ்வாறு ஆற்றுவது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தச் செயற்பாடுகளை நாங்கள் ஆரம்பித்திருக்க வேண்டும். போர் வெற்றியை கொண்டாடுவதற்குப் பதிலாக, உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்திருக்க வேண்டும்.” – என்றார்.
……………………