பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியுள்ளனர்.
அதில் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறித்த டி-சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு,
2 மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்து நடனம் ஆடியதாகவும் புகார் மனு இயக்குநரகத்துக்கு வந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழாவின் போது இத்தகைய திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது,
சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது விதியின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.
எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.