பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை இலங்கைக்கு வருகின்றார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.
இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மாணம், 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை நிறுவும் திட்டம் என்பவற்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ – அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையைத் திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கைப் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம். அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புக்களிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்.” – என்று இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பின்னர் இந்தப் பயணம் இடம்பெறுகின்றது என்றும் அந்தப் பதிவில் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
……………