மீண்டும் பொருளாதார-வர்த்தக வீழ்ச்சி நிகழ்ந்தால் நாடு தாங்காது என்பதை அரசு உணர வேண்டும் பிரதமர் மோடியின் கரங்களை பற்ற வேண்டும் என்கிறார் மனோ.

தனி ஒரு நாடாக, இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 விகிதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும். இது பழைய இடதுசாரி அரசியல் செய்யும் நேரமில்லை.
மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி யுகத்தை நம் நாடு தாங்காது. தொழிற்துறை முடங்கி, வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து, பண புழக்கம் குறைய விட கூடாது. மிக சரியான சந்தர்ப்பத்தில் இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை நாம் இறுக பற்றி, வளர்ச்சி அடையும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவுடன் சேர்ந்து கரையேற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு, இந்திய பிரதமர் வருகை ஆகியன தொடர்பில், மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது;
ஜனாதிபதி ட்ரம்பின் வரி போரின் (tarif war) காரணமாக இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கை கொண்ட அமெரிக்க சந்தை பறி போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எமது ஏற்றுமதியில் 25% ஆகும்.
அதேபோல் விரைவில், ஜீஎஸ்பி+ (GSP+) நிபந்தனைகளை எடுத்து கொண்டு ஐரோப்பிய யூனியன் குழு இலங்கை வருகிறது. ஐரோப்பிய சந்தையும் இப்படியே சிக்கலுக்கு உள்ளானால், நம் நாட்டு ஆடை ஏற்றுமதி தொழில் துறை முழுமையாக ஸ்தம்பிதம் அடையும். வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து, பண புழக்கம் குறையும்.
புதிய உலக ஒழுங்கின் படி, இன்று பல்தரப்பு (multilateral) உலக மயமாக்கல் ஒப்பந்தங்கள், மெல்ல, மெல்ல, வழக்கழிந்து போவதையும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர (bilateral) வர்த்தக ஒப்பந்தங்கள் மேல் எழுந்து வருவதையும் இடதுசாரி அரசியல் கட்சி தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த கால இலங்கை அரசுகள், இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, போன்ற பல்வேறு நாடுகளுடன், பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய முயன்ற போது, அவற்றை, எதிர்த்து பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிற்சங்க படை ஆகியவற்றை தெருவில் இறக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுத்த தமது பாவத்தை கழுவ வேண்டிய நிலைமைக்கு இன்று ஜேவிபி தள்ள பட்டுள்ளது.
ஆகவே இது பழைய அரசியல் செய்யும் நேரமில்லை. நிலைமையின் பாரதூரத்தை அனுரகுமார உணர வேண்டும். இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் முன்னேறிவரும் பொருளாதார சக்திகளுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க முன் வர வேண்டும்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ச்சி அடைந்து உள்ளது. அடுத்து வரும் பத்தாண்டில் உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக வளர வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இந்தியாவுக்கு உள்ளது. இலங்கைக்கு உதவிட இந்தியா மிக ஆர்வமாக உள்ளது.
மிக சரியான சந்தர்ப்பத்தில் இன்று இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை இறுக பற்றி, வளர்ச்சி அடையும் பொருளாதார நாடான இந்தியாவுடன் சேர்ந்து நாம் கரையேற வேண்டும். அதற்குரிய முறையில் இந்திய பிரதமரின் விஜயத்தை நாம் கையாள வேண்டும் என அரசாங்கதுக்கு நல்லெண்ணத்துடன் கூறி வைக்க விரும்புகிறேன்.