37 வேட்புமனுக்களை ஏற்கும் உத்தரவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் மேன்முறையீடு – அப்பீல் நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றை நாடும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேன்முறையீட்டு (அப்பீல்) நீதிமன்றம் இன்று முற்பகல் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தெரியவருகின்றது.
வேட்புமனுக்களில் இளம் வேட்பாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப் பிரதிக்குப் பதிலாக நிழல் பட பிரதியில் சமாதான நீதிவான் சான்றுரைத்துருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே பெரும்பாலும் 37 ரிட் மனுக்களில் பலவற்றையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுத் தீர்ப்பு வழங்கியிருந்தது.
ஆனால், இன்று மாலை இதே விவகாரத்தையொட்டி தனது தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம், மேற்படி பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தின் நிழல் படப் பிரதியில் சமாதான நீதிவான் சான்றுரைத்திருப்பதை உரிய ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
ஒரே விடயத்தையொட்டி இரண்டு நீதிமன்றங்கள் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியிருக்கையில், நியாயாதிக்கம் கூடிய மேனிலை நீதிமன்றமான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற தேர்தல் ஆணையம் தீர்மானித்து இருக்கின்றது. அதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு, அதன்படி செயற்பட தேர்தல் ஆணையம் முடிவு செய்து இருப்பதாகத் தெரியவருகின்றது.
ஆயினும், நீதிமன்ற விடுமுறை இன்றுடன் தொடங்குவதால், விடுமுறை சமயத்தில் விசேடமாக உயர்நீதிமன்றத்தைக் கூட்டுவதற்கான விண்ணப்பத்தைத் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்து, தனது மேன்முறையீட்டைது முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.