59 தேர்தல் மனுக்களையும் நிராகரித்தது உயர்நீதிமன்று மேன்முறையீட்டு மன்றுக்கு முற்றிலும் மாறாகத் தீர்ப்பு.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 37 ரிட் மனுக்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தேர்தல் நடவடிக்கையில் சேர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று முற்பகல் உத்தரவிட, அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர், அதேபோன்று 59 மனுக்களை உயர்நீதிமன்றம் அடியோடு நிராகரித்துத் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.

இளம் வேட்பாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்கான பிறப்புச் சான்றிதழைப் பொறுத்தவரை சான்றிதழ் பத்திரத்தின் நிழல் பட பிரதியில் சமாதான நீதிவான் சான்றுரைத்து இருந்தால் அத்தகைய ஆவணத்தை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவையாகக் கூறப்பட்ட 37 வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு இன்று முற்பகல் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசர் எம்.ரி.முஹம்மட் லபார், நீதியரசர் கே. பிரியங்கா பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால் கடந்த நான்கு நாள்களாக இதே போன்ற மனுக்களை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் இதே காரணத்துக்காக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஏற்று அங்கீகரித்து இருப்பதோடு, தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 53 ரிட் மனுக்கள் மற்றும் ஆறு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் இன்று அடியோடு நிராகரித்துத் தீர்ப்பளித்து இருக்கின்றது.

சமாதான நீதிவான் சான்றுரைத்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தின் பிரதியை ஏற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பில் காலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட விடயத்துக்கு முற்றிலும் தலைகீழான முடிவை – தீர்ப்பை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் துரைராஜா, மஹிந்த சமயவர்த்தன, சம்பத் அபயக்கோன் ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை இன்று பிற்பகல் வழங்கியது.

Leave A Reply

Your email address will not be published.