மோடியின் வருகையையொட்டி 11 இந்திய மீனவர்கள் அவசரமாக விடுவிப்பு.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றமையையொட்டி இலங்கைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு இன்று அவசர அவசரமாக முன்னெடுத்தது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 14 இந்தியா மீனவர்களில் மூன்று இந்திய மீனவர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், எஞ்சிய 11 பேரும் இன்று பகல் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு எதிரான ‘பி’ அறிக்கையை விலக்கிக்கொள்வதாக அரச தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தமையை அடுத்து அவர்கள் 11 பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் 11 பேரும் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக உடனடியாக கொழும்பு மிரிஹானவில் உள்ள புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.