மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி .

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிட்செல் மார்ஸ் 60 ரன்களும், ஏய்டன் மார்க்கரம் 53 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
வழக்கம்போல் பந்த் ரசிகர்களை ஏமாற்றி இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க, பூரான் 12 ரன்கள் எடுத்தார். நடு வரிசையில் ஆயுஸ் பதோனி 30 ரன்களும், டேவிட் மில்லர் 27 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் கடுமையாக தடுமாறினர். இதனால் லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் பந்துவீச்சு தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனை அடுத்து 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய வில் ஜேக்ஸ் ஐந்து ரன்களிலும், ரியன் ரிக்கல்டன் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நமன் தீர் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அபாரமாக விளையாடினர். நமன் தீர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். ஒரு கட்டத்தில் சூரிய குமார் மட்டும் தனி ஆளாக நின்று மும்பை அணியை காப்பாற்றினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா 23 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் பெரிய ஷாட் அடிக்க முடியாததால் தாமாகவே ரிட்டையர் அவுட் ஆனார். தனி ஆளாக நின்று மும்பை அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் யாதவ் 43 பந்துகளில் 67 ரன்களில் வெளியேறினார். கடைசி இரண்டு ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சர்துல் தாக்கூர் வீசிய 19-வது ஓவரில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்தார். இதனால் மும்பை அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஆவேஷ் கான் அபாரமாக பந்து வீசி வெறும் மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் 20 வது ஓவர் முடிவில் மும்பை அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை அணி ஏழாவது இடத்திலும் சிஎஸ்கே அணி எட்டாவது இடத்திலும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.