கிரிபத்கொட போலி ஆவண வழக்கில் தேடப்பட்டு வந்த சிங்கப்பூர் சரத் கைது!

கிரிபத்கொட நகரில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிக்கு போலி ஆவணங்கள் தயாரித்தமை தொடர்பில் கைது செய்ய தேடப்பட்டு வந்த மேலும் ஒரு சந்தேக நபரான டொன் சரத் குமார எதிரிசிங்க எனும் சிங்கப்பூர் சரத் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (04) முற்பகல் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்று (04) பிற்பகல் அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மஹர பதில் நீதவான் வசந்த ராமநாயக்க அவரை இந்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இவர் தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவின் அப்போதைய பாராளுமன்ற விவகார செயலாளராக பதவி வகித்தவர்.

அவர் கிரிபத்கொட சிங்கள வர்த்தக சங்கத்தின் உப தலைவராகவும் உள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா, களனி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் வைத்தியர் ஜயந்த சிங்ஹபாஹு கப்ரால் மற்றும் நவின் வீரக்கோன் ஆகிய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சந்தேக நபரை தேடிக் கொண்டிருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தோம். இவர் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார். விசாரணைகள் முடிவடையவில்லை. இவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோருகிறோம் என்றனர்.

சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தேஷால் போல் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக இருந்தபோதுதான் கைது செய்யப்பட்டார். தனது வியாபார நடவடிக்கைகளின் வேலைகளை முடித்துவிட்டு சரணடைய இருந்தார். இவர் நீதிமன்றத்தை தவிர்த்து தலைமறைவாக இருக்கவில்லை.

இவர் சுகவீனமாக உள்ளார். அதனால் இவருக்கு தேவையான மருந்துகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் இல்லை. அது குறித்து கவனம் செலுத்துமாறு நீதிமன்றத்திடம் கோருகிறோம்.

இரு தரப்பினரும் முன்வைத்த கருத்துக்களை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், சந்தேக நபரை இந்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி தேஷால் போல் ஆஜரானார்.

Leave A Reply

Your email address will not be published.