“இலங்கை மித்ர விபூஷண” விருது எனக்கு வழங்கப்பட்டமை பெருமைக்குரிய விடயம் – இந்தியப் பிரதமர் மோடி தெரிவிப்பு.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது எனக்கு வழங்கப்பட்டமை பெருமைக்குரிய விடயம் ஆகும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரு தரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டதையடுத்து இந்தியப் பிரதமர் மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமையாகும்.
இது இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் ஆழமான நட்புக்குகே கிடைத்த மரியாதையாகும்
உண்மையான அண்டை நாடாகவும் நண்பராகவும் நமது கடமைகளை நிறைவேற்றியிருப்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
2019 பயங்கரவாதத் தாக்குதல், கொரோனாத் தொற்றுநோய், சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.
எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான ‘மகாசாகர்’ ஆகிய இரண்டிலும் இலங்கைக்குச் சிறப்பு இடம் உண்டு.” – என்றார்.