கச்சத்தீவை இந்தியா குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் கருத்து!

ஐநாவின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு என்றும், இடைக்கால தீர்வாக 99 ஆண்டுகள் கச்சத்தீவை குத்தகைக்குப் பெறவேண்டும் எனவும் அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

“1974ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், அன்றைய ஆளும்கட்சியான திமுகதான். 1999 முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே திமுகவின் தயவினால்தான். அத்தகைய நிலையில் அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன் என்ற கேள்வி தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

“2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் திமுக அரசை தவெக கடுமையாக கண்டிக்கிறது. இலங்கை கடற்படை தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை மட்டும் கைவிடுவது ஏன்?,” என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 ஆண்டு குத்தகையாக கச்சத்தீவைப் பெற வேண்டும் என்றும் இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

“இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே தீர்வு.

“இலங்கை செல்லும் பிரதமர் மோடி, ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். பிரதமரின் இந்த இலங்கை பயணம் தமிழக மீனவர்கள், இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்,” என்று விஜய் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.