2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

2025 ஐபிஎல் தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கெத்து காட்டி இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 2025 ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டி முள்ளான்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடினர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

ரியான் பராக் 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் ராணா 7 பந்துகளில் 12 ரன்கள், ஷிம்ரோன் ஹெட்மையர் 12 பந்துகளில் 20 ரன்களும் அடித்தனர். துருவ் ஜுரல் 5 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸுக்கு 206 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக ஆடி இருந்த பஞ்சாப் கிங்ஸ் இந்த போட்டியிலும் இந்த இலக்கை எட்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், முதல் பந்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரியன்ஷ் ஆர்யா இன்னிங்ஸின் முதல் பந்தில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்ட் அவுட் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்ட் அவுட் ஆனார். முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் இழந்து மோசமான நிலைக்கு சென்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்த போதும் ரன் ரேட் அழுத்தத்தால் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

பிரப்சிம்ரன் சிங் 17 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்களும் எடுத்து பவர் பிளேவில் ஆட்டம் இழந்தனர். அதன் பின் மிடில் ஆர்டரில் இறங்கிய நெஹால் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடினர். வதேரா 41 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

ஆனால், அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததற்குப் பிறகு மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட் வீழ்ச்சியில் சிக்கியது. ஷஷாங்க் சிங் 10 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.