ஐபிஎல் 2025, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிராக 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் 15 ரன்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் டக் அவுட்டாக அபிஷேக் போரெல் அதிரடியாக விளையாடி 33 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் அக்சர் பட்டேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும் எடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரிகளும்,மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இதனால் டெல்லி அணில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே பவுலிங் தரப்பில் கலீல் அஹ்மத் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் சிஎஸ்கே அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா, கான்வே உடன் ஜோடி சேர்ந்தார். ரச்சின் ரவீந்திரா 3 ரன்களில் ஆட்டம் இழக்க கான்வே 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் ஐந்து ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதன் மூலம் சிஎஸ்கே அணி 41 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விஜய் சங்கர் விக்கெட்டுகளை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே பொறுமையாக ஆடினார். மறுபுறம் சிவம் துபே அதிரடி காட்ட முற்பட்டு 15 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் சிஎஸ்கே அணிக்கு தேவைப்படும் ரன்கள் மிகவும் அதிகமாக இருந்தது. விஜய் சங்கர் மற்றும் தோனி ஆகியோர் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஜோடி பௌண்டரி சிக்ஸர்கள் அடிக்க முடியாமல் தடுமாறினர்.

இறுதியில் தோனி 30 ரன்களும்,விஜய் சங்கர் 69 ரன்களும் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் வென்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி தற்போது நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மூன்று தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.