அமெரிக்கா இனி இலங்கைக்கு திறந்த சந்தை அல்ல.. உடனடியாக ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்கிறார் ரணில்!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் காரணமாக அந்த நாட்டு சந்தை இனி இலங்கைக்கு திறந்திருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய நிலைக்கு தீர்வாக இந்தியாவுடன் ‘ETCA’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தான் ஜனாதிபதியாக இருந்தபோது 2025 ஆம் ஆண்டில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட எண்ணியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
இப்போதும் இலங்கை இந்தியாவுடன் ETCA ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும் என்பது தனது கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
‘ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். எனது எண்ணம் 2025 ஆம் ஆண்டில் அதில் கையெழுத்திட வேண்டும் என்பதுதான். இப்போது நாம் அதனுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
நாங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பியிருந்தோம். ஆனால் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை எப்படி இருக்கிறது என்பதை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். அது இனி ஒரு சந்தையாக திறந்திருக்காது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்திற்கு என்ன நடக்கும் என்று நம்மால் கூற முடியாது.
எனவே, முதலில் நாம் இந்த ஆண்டு ETCA இல் கையெழுத்திட வேண்டும்.
இப்போது நம்மிடம் இருப்பதை விட்டுவிடாமல் புதிய பகுதிகளுக்கு நாம் நுழைய வேண்டும். அங்கு ஆடைகள் மட்டும் போதாது. அதற்கு மேலும் பொருட்கள் தேவை.’