ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ அல்லது தமிழர்களுக்கான தீர்வோ சரிவராது என சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இந்தியப் பிரதமரை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. அவர்கள், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ அல்லது தமிழர்களுக்கான தீர்வோ சரிவராது என்ற தமது நிலைப்பாட்டை இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் நான்கு முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முதலாவதாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுக்கு மட்டுமே உரித்து உள்ளது என்பதை தாம் அங்கீகரிப்பதாகவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், குறிப்பாக வடக்கு கிழக்கில் இந்தியாவின் உரிமையை வரவேற்பதாகவும் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக, தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு நெருக்கமான சர்வதேச ஆவணமாக இருந்தபோதும், ஒற்றையாட்சிக்குள் அது முடக்கப்பட்டதால் பலனளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியதாகவும், சமஷ்டி முறைமைக்கு கீழ் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் தீர்வு காண முடியும் என்றும் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். இதற்காக தமிழ்க் கட்சிகளை டெல்லிக்கு அழைத்து பேசும்படி இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, வடக்கு கிழக்கில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக வெளித்தரப்பினருக்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
நான்காவதாக, வடக்கு கிழக்கு மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண வடக்கு கிழக்கு மீனவ மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இந்தியா சென்று பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மீனவர்களின் இழப்புகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.