கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மரணம்: வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதவி நீக்கம்!

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி இரவு வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நுழைந்திருந்த ஒருவரை கைது செய்த பின்னர், அவர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதால் அதிகாரிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொள்வதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான பரிந்துரையை 2025.04.06 ஆம் திகதியான இன்று பதில் பொலிஸ்மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்காக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், இந்த சம்பவத்தில் தமது கடமையை சரிவர நிறைவேற்ற தவறியதாக அவதானிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரின் பணிகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.