வெற்றிகரமாக நிறைவடைந்தது மோடியின் இலங்கை விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , நேற்று முற்பகல் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு” என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , கடந்த வெள்ளி இரவு இலங்கை்கு அரச பயணமாக கொட்டும் மழையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
இது , இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை என்பதுடன், இந்த அரச விஜயத்தால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு , அவரது பயணத்தை குறிப்பிட்டுள்ளது.
இந்த விஜயத்தில் , முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் என பலர், இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.
அதேவேளை, இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினர், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.