ராம நவமி தினத்தில் அயோத்தி பால ராமர் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது

அயோத்தி: ராம நவமி தினத்தில் அயோத்தி பால ராமர் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி உத்தர பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. தற்போது நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பால ராமரை வழிபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் நாடு முழுவதும் நேற்று ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், சந்தனம் மூலம் பால ராமருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டன.

மஞ்சள் நிற ஆடை, தலையில் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடம், கையில் தங்க வில், அம்புடன் பால ராமர் காட்சியளித்தார். 14 அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதினர். அதிகாலை 5 மணி முதலே அயோத்தி ராமர் கோயிலின் பூஜை, வழிபாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தொலைக்காட்சி, இணையதளம், செயலிகள் வாயிலாக சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

மதியம் 12 மணிக்கு பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது. அப்போது சுமார் 4 நிமிடங்கள் வரை பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி பாய்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி, ரூர்க்கி ஐஐடி, இஸ்ரோவை சேர்ந்த நிபுணர்கள் செய்திருந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலின் 3-வது தளத்தில் பிரதிபலிப்பான் (ரிப்ளக்டர்) பொருத்தப்பட்டது. அதில் சூரிய ஒளிபட்டு, நேர்கோட்டில் அமைக்கப்பட்ட குழாயின் இறுதியில் பொருத்தப்பட்ட கண்ணாடியில் பிரதிபலித்தது.

அங்கிருந்து செங்குத்தாக அமைக்கப்பட்ட குழாயில் அடுத்தடுத்து 3 லென்ஸ்கள் பொருத்தப்பட்டன. அந்த லென்ஸ்களை சூரிய ஒளி கடந்து தரைதளத்தில் உள்ள கண்ணாடியில் பிரதிபலித்தது. அங்கிருந்து நேரடியாக பால ராமர் நெற்றியில் சூரிய ஒளி திலகமிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகமிடப்படும். இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.

ட்ரோன்கள் மூலம் புனித நீர்: ராமர் கோயில் வளாகத்தில் நேற்று சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. சரயு நதிக்கரைகளில் சனிக்கிழமை இரவு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன. சரயு நதிக் கரைகளில் நேற்றிரவும் தீபங்கள் ஒளிந்தன. ராம நவமியை ஒட்டி நேற்று 18 மணி நேரம் பால ராமரை பக்தர்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.