இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்குவதாக கேரள தனியார் நிறுவனம் மீது புகார்

இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்குவதாக கேரள தனியார் நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளன.
இந்திய மாநிலமான கேரளா, எர்ணாகுளம் பகுதியில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலக்கை எட்ட முடியாத ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல நடக்க வைத்திருப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நாய் போன்று குரைக்கவும், தரையில் தூசியை நக்க வேண்டும் போன்ற கொடூர தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கேரள தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் தரப்பில், “மாத சம்பளம் மற்றும் சிறப்பு படிகள் கொடுப்பதாக கூறி இளைஞர்கள் மற்றும் பெண்களை தனியார் நிறுவனம் வேலையில் அமர்த்தியது. ஆனால், அவர்கள் கூறியபடி சம்பளம் கொடுக்கப்படவில்லை.
அதிக தயாரிப்புகளை விற்று இலக்குகளை முடிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இலக்கை எட்ட முடியாத ஊழியர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், “சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவர், இந்த வீடியோ போலியானது என்றும், கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.