ஜி.எஸ்.பி. பிளஸும் இல்லாமல் போகும்! – அரசுக்கு ஹர்ஷ டி சில்வா எம்.பி. எச்சரிக்கை.

“அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளில் கேள்வியெழுப்ப எதிர்பார்க்கின்றோம்.
கைசாத்திடப்பட்டப்பந்தங்கள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கான உரிமை சகலருக்கும் உள்ளது.
இந்தியப் பரவாலக்கத்தைக் கடுமையாக எதிர்த்த குழுவொன்று இன்று இந்தியப் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து அவருக்கு இலங்கையில் வழங்கப்படும் அதியுயர் கௌரவ நாமத்தையும் வழங்கியிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கைக்கு மிக அருகிலுள்ள பாரிய பொருளாதார சக்தி இந்தியாவாகும்.
தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்ரா ஆகிய மாநிலங்கள் அடுத்த தசாப்தத்தில் உலகில் மிக வேகமாக அபிவிருத்தியடையும் வலயமாக அமையும். இவற்றின் இந்தத் துரித அபிவிருத்தியில் பயன்பெறுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பிருக்கின்றது. எவ்வாறிருப்பினும் அதற்கான முன்னெடுப்புக்களுக்கு தமது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இந்த அரசு ஆட்சியமைத்ததில் இருந்து சுவர்களை உடைத்து, பாலங்களை அமைக்குமாறு நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். அவ்வாறு சுவர்களை உடைத்து, பாலங்களை அமைத்தவர்களுக்கு அமெரிக்காவால் தடை விதிக்கப்படவில்லை. மாறாக பாலங்களை உடைத்து சுவர்களை அமைத்தவர்களுக்குத் தடையிருக்கின்றது. இதன் மூலம் நாம் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வருடாந்தம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரச குழுவொன்று செல்வது வழமையாகும். இதன்போது அமெரிக்காவின் வரி குறித்து பேசப்படப் போகின்றதா என்பது எமக்குத் தெரியாது. நாணய நிதியத்தில் இருப்பதால் எமக்கு நிவாரணம் வழங்குமாறு கோரினால் அதனை ஏற்கக் கூடியவரல்ல ட்ரம்ப்.
வியட்நாம் ட்ரம்பிடம் முன்மொழிந்துள்ளதைப் போன்று அசாதாரணமான வாய்ப்பொன்றை வழங்கினால் வரி குறைப்பு குறித்து சிந்திக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகின்றது. அவ்வாறெனில் அந்த அசாதாரணமான வாய்ப்பு என்ன என்பது குறித்து அரசும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தீர்மானிக்க வேண்டும்.
பிராந்திய பொருளாதார ஒப்பந்தங்களுக்குச் செல்லாமல் நாட்டுக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் ப்ளு பிரின்ட் வெளியீட்டில் இது தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம்.
இந்தியப் பிரதமருடன் தற்போது பேச வேண்டிய மிக முக்கிய காரணி எக்டாவாகும். பொருளாதார ரீதியில் எவ்வாறு இணைந்து செயற்படுவது, தென்னிந்திய 5 மாநிலங்களின் தீவிர அபிவிருத்தியிலிருந்து எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் இருப்பதால் அமெரிக்க வரி அதிகரிப்பினால் சிக்கல் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.
இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் நிறைவடையப் போகின்றது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. எனவே, புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும்.
பயங்கரவாரத் தடைச் சட்டம், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பில் இலங்கை என்ன செய்திருக்கின்றது என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும். இன்னும் இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. வந்ததன் பின்னர் நிச்சயம் இவை தொடர்பில் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்கு எந்தளவுக்கு இலங்கை போராடியது என்பதை என்னைத் தவிர இந்த நாடாளுமன்றத்தில் யாருக்கும் தெரியாது. எனவே, இவை தொடர்பில் அரசு தீர்க்கமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.” – என்றார்.