அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒருபோதும் கிடையாது!

“அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குக் கிடையாது. தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது கட்சியின் மீது அவதூறுகளும் சேறடிப்புகளும் மேற்கொள்ளப்படுவது புதிய விடயங்கள் அல்ல.”
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வேலணை பிரதே சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு கட்சி சார்பானவர்களினால் எமது கட்சி தொடர்பாக சில விமர்சனக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
உண்மையில் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த தேர்தல் வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயப்பட்டிருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை.
இருந்தாலும் குறித்த விவகாரம் தற்போதும் நீதிமன்றில் இருக்கின்ற நிலையில் அது தொடர்பாக நாம் தற்போதைக்கு எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
ஆனால், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையிலே, எம் மீது சேறடித்தாவது ஈ.பி.டி.பி. கட்சியை வேலணை பிரதேச சபையில் தோல்வியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே இந்தக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான சேறடிப்புக்கள் எமது கட்சியைப் பொறுத்தவரையில் புதிய விடயங்கள் அல்ல. கடந்த காலங்களிலும் தேர்தல் காலங்களில் பலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
எமது கட்சியினுடைய வேலைத்திட்டங்களையும் மக்கள் நலச் செயற்பாடுகளையும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளையும் எதிர்கொள்ள முடியாதவர்களும், தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் வந்து, மக்களிடம் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்குத் தேவையான அரசியல் முகவரிகள் ஏதும் அற்றவர்களும் கைகளில் எடுக்கின்ற கீழ்த்தரமான குறுக்கு வழித் தந்திரமாகவே இவ்வாறான ஊடகச் சந்திப்புக்கள் நடத்திப்படுகின்றன என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வேலணை பிரதேச சபையை எடுத்தக்கொள்வோமாக இருந்தால், 1998 ஆம் ஆண்டில் இருந்து தொடச்சியாக எமது ஆட்சியிலே இருந்து வருகின்றது. அந்தப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அந்த அபிவிருத்தித் திட்டங்களில் இருந்து சிறு தவறைக்கூட யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாது. காரணம். அந்தளவுக்கு நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சிறப்பாகவும் எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதன்காரணமாகவே எம் மீது சேறு பூசுவதன் மூலமும், கடந்த கால அவலங்களைப் பேசுபொருளாக்கி கிடைக்கக் கூடிய அனுதாப வாக்குகள் ஊடாக எம்மை வீழ்த்துவதற்கும் முயல்கின்றார்கள்.
கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த காரணத்தினால் நூற்றுக்கணக்கான எமது கட்சித் தோழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதனால் எத்தனையோ குழந்தைகள் அநாதரவாக்கப்பட்டிருக்கின்றனர். எத்தனையோ பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறான அவலங்களை எல்லாம் பேசுபொருளாக்கி கீழ்த்தரமாக அரசியல் ஆதாயம் தேடும் தேவைக்கு எமக்குக் கிடையாது.
எம்மால் முன்னெடுக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அபிவிருத்தித் திட்டங்கள், அரசியல் உரிமை தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான எமது அணுகுமுறை யாவும் எமது மக்ககள் மத்தியில் எம்மை இறுகப் பற்றி வைத்திருக்கின்றது.
எனவே, எம் மீது சேறடித்து எம்மை வீழ்த்த முடியும் என்று கனவு காண்கின்றவர்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லுகின்றோம். உங்களின் இவ்வாறான சேறடிப்புக்கள் ஊடகங்களில் இடம்பிடிக்கலாம். எமக்கு பின்னடைவைத் தோற்றுவித்திருப்பது போன்று தோன்றலாம். ஆனால், மக்களிடம் இருந்து எம்மைப் பிரிக்க முடியாது. தயவு செய்து பகல் கனவு காணாதீர்கள்.
இன்னுமொரு விடயத்தையும் சொல்ல விரும்புகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியை வீழ்த்துவதற்கு முன்னர் உங்களை அரசியலில் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடப் போகின்றீர்கள் என்றால் உள்ளூராட்சி சபைகள் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்.
நேற்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சகோதர் சொல்கின்றார், தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாதாம். அவர் கூறிய விடயம் சரியானது. ஆனால், அவர் அதற்குக் கூறிய காரணம் கண்றாவியாக இருந்தது. அவரின் உள்ளூராட்சி மன்றங்கள் பற்றி புரிதலை வெளிப்படுத்தியது.
அதாவது, ஜனாதிபதி, நாடாளுமன்றம் எல்லாம் ஒரு கட்சியிடம் இருக்கின்ற நிலையில் உள்ளூராட்சி சபையும் அவர்களிடம் போய்விட்டால், எதிர்த்துக் கேள்வி கேட்பதற்கு ஒரு இடமும் இல்லாமல் போய்விடுமாம்.
அதாவது, ஜனாதிபதி செய்கின்ற தவறுகளையும் நாடாளுமன்றத்தின் தவறுகளையும் உள்ளூராடசி சபைகிளில் சுட்டிக்காட்டினால் அல்லது எதிர்ப்பை வெளியிட்டால் அவற்றைத் தடுத்து நிறுத்தலாம் என்ற புரிதலுடன்தான் அந்தச் சகோதர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
பாவம் அந்தத் தம்பியை சொல்லிக் குற்றமில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறுகின்ற விடயங்களுக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நடக்கின்ற விடயங்களுக்கும் மாகாண சபையிலும் உள்ளூராட்சி சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி சாதனை படைத்த வித்துவான்களைத் தலைவர்களாகக் கொண்டவரே அந்தத் தம்பி.
மாகாண சபை டக்ளஸ் தேவானந்தாவின் கைகளில் கிடைக்குமானால், அந்த மாகாண சபையில் மக்கள் நலன் சார்ந்த அதிகாரங்கள் இருக்கின்றன என்ற உண்மை வெளிப்பட்டு விடும். ஆகவே, அதனைத் தடுத்து மாகாண சபையில் ஒன்றும் இல்லை என்று காண்பிக்க வேண்டும் என்பதற்காக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறிய அறிவாளிகளின் தோள்களில் ஏறி தற்போது சைக்கிள் ஓட்டுகின்ற ஓர் இளைஞனிடம், சரியான அரசியல் புரிதல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே, மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.” – என்றார்.