என்னை விளக்கமறியலில் வைப்பதால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது! – சி.ஐ.டியிடம் நேற்று வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாமல் தெரிவிப்பு.

என்னை விளக்கமறியலில் வைப்பதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சொத்துக் கொள்வனவொன்றின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சி.ஐ.டி.யினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைகளை நடத்தினர்.

முற்பகல் 10 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

சொத்துக்களைச் கொள்வனவு செய்யப் பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிடத் தவறியதன் மூலம் கறுப்புப் பணச் சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். மேலும் இது தொடர்பில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஓர் அங்கமாக டெஸி பொரஸ்ட் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சி.ஐ.டியினர் நேற்று இந்த விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முற்பகல் 10 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்ததுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறிருந்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கேள்வி:- நீங்கள் சி.ஜ.டி.க்கு எதற்காக அழைக்கப்பட்டுள்ளீர்கள்?

பதில்:- டெஸி பாட்டி தொடர்பில் விடயங்களை அறிந்துகொள்வதற்காக சி.ஜ.டி. க்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தெரிந்தவற்றை கூறி விட்டு செல்லலாம் என வந்துள்ளேன்.

கேள்வி”- இதற்கு முன்னரும் சி.ஐ.டி. க்கு அழைக்கப்பட்டிருந்தீர்கள் அல்லவா?

பதில்:- எனக்கு சி.ஐ.டி. வீடாக மாறி விட்டது. அதாவது தற்போது நான் அடிக்கடி வந்து போகும் இடமாக மாறியுள்ளது.

அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் எம்மை சி.ஐ.டி. க்கு அழைக்கின்றார்கள். இங்கு அடிக்கடி வருகின்றோம். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் வழங்கி விட்டுச் செல்கின்றோம்.

கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. உங்களை சி.ஐ.டி. க்கு அழைப்பது தேர்தலில் நெருக்கடியை ஏற்படுத்தும் அல்லவா?

பதில்:- இது எமக்குப் பெரிய விடயமல்ல. தமக்கு வாக்களிக்கவில்லை இல்லை என்றால் பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார எச்சரிக்கை விடுக்கின்றார். இது பாரிய அச்சுறுத்தல் அல்லவா? சி.ஐ.டி. க்கு எம்மை அழைப்பது சாதாரண விடயமாகும். எம்மைச் சிறையில் அடைப்பதால் எமது தேர்தல் பிரசாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது. நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைப்பதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.