தொடரும் அமெரிக்க – சீன வரிவிதிப்பு போர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு நெருக்கடி தரும் விதமாக சீன இறக்குமதிகளுக்கு கூடுதலாக 50 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே 34 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட நிலையில், சீனா பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் சீன இறக்குமதிகளுக்கான மொத்த வரி 104 விழுக்காட்டை எட்டக்கூடும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீனா உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் கூடுதல் வரி ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா அச்சுறுத்தல் என சாடியுள்ளது. அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்வதாகவும், இது வாஷிங்டனின் மிரட்டல் போக்கை காட்டுவதாகவும் சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனா கடைசி வரை போராடும் என்றும், அமெரிக்கா வரியை அதிகரித்தால் சீனாவும் பதிலடி கொடுக்கும் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபரின் கருத்துக்களை சீன வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது. டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் உலக பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை சொந்த கட்சியினரே விமர்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளின் இந்த பதிலடி வரி விதிப்பு வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.