மாகாண சபை தேர்தலின் பின் புதிய அரசமைப்பு – பிரதமர் வாக்குறுதி.

“நாட்டு மக்களின் அபிலாஷையுடன் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். யாப்பு உருவாக்கப் பணிகள் வினைத்திறனான வகையில் முன்னெடுக்கப்படும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை மேற்கொள்வோம்.”
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு அரசுக்கு உண்டு.இருப்பினும் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. நிறுவனக் கட்டமைப்பின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் தோல்வியடைந்துள்ளன. அதனால்தான் நீதிப் பொறிமுறையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மீண்டும் அசாதாரண சூழல் தோற்றம் பெறாத வகையில் நிறுவனக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.
இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம் ஆகியன மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்குப் பிரதான காரணம் அந்த அலுவலகங்கள் பெயரளவில் ஸ்தாபிக்கப்பட்டமையாகும். இவ்வாறான நிலைமையே கடந்த காலங்களில் காணப்பட்டன. இதனைத் திருத்தவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.
காணாமல்போனோர் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த 16 ஆண்டுகாலமாக விசாரிக்கப்படுகின்றன. இது இலகுவானதொரு விடயமல்ல, இருப்பினும் நீதியை நிலைநாட்ட நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு விசேட குழுவை நியமிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சி பெற்றுக்கொண்டுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
நாட்டு மக்களின் அபிலாஷையுடன் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். யாப்பு உருவாக்கப் பணிகள் வினைத்திறனான வகையில் முன்னெடுக்கப்படும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை மேற்கொள்வோம்.” – என்றார்.