பிள்ளையானை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான், மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றுமுன்தினம் மாலை கைது செய்யப்பட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி, கொழும்பு 7இல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றியிருந்தபோது, பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று அறியமுடிந்தது.