டோமினிக்கன் ரிபப்ளிக்கில் இரவு விடுதி கூரை விழுந்ததில் 98 பேர் பலி.

கரிபியாவின் டொமினிக்கன் ரிபப்ளிக் தலைநகரில் பிரபல இரவு விடுதியின் கூரை இடிந்துவிழுந்ததில் குறைந்தது 98 பேர் மாண்டனர்; 160 பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செண்டா டொமிங்கோவில் உள்ள ஜெட் செட் இரவு விடுதியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், விளையாட்டாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது கூரை இடிந்துவிழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். சிக்கியவர்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
சம்பவம் நடந்து 12 மணி நேரம் கழித்தும், இடிபாடுகளிலிருந்து மீட்புப் பணியாளர்கள் உயிருடன் இருப்பவர்களை மீட்டுள்ளனர்.
சிக்கிக்கொண்டவர்களின் சத்தம் கேட்கவேண்டும் என்பதற்காக சுற்றியுள்ளோர் அமைதியாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மொன்டிகிறிஸ்டி என்ற வடமேற்கு பகுதியின் ஆளுநர் நெல்சி க்ருஸ், இடிபாடுகளில் சிக்கியோரில் ஒருவர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்குப் பின் 12.49 மணிக்கு தொலைபேசியில் தம்மை அழைத்து இரவு விடுதியின் கூரை இடிந்துவிழுந்தது என்றும் இடிபாடுகளில் தாம் சிக்கியிருக்கிறார் என்றும் கூறியதாக டொமினிக்கன் ரிபப்ளிக்கின் அதிபர் லூயி அபினாடருக்குத் தெரிவித்தார்.
இரவு விடுதியின் கூரை இடிந்துவிழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகளுடன் ஒத்துழைத்துவருவதாக ஜெட் செட் இரவு விடுதியின் நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டது.