ஊழலை ஒழிக்க ஜனாதிபதி கெடுபிடி ! மாற கொடுத்த நேரம் மே மாதத்துடன் முடிவடைகிறது… நீங்களாக மாறவும்… இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள்… ஊழல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

அரசியல் பொறிமுறையை இலஞ்சம் மற்றும் ஊழல் என்ற குற்றத்திலிருந்து விடுவிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், அதிகாரத்துவ பொறிமுறையும் விரைவில் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அதற்காக ஏற்கனவே 06 மாத காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்துவ பொறிமுறை திருந்தாவிட்டால் அடுத்த மே மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற “தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029” வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
நாட்டின் அரச நிறுவனங்களின் கௌரவத்தையும் மதிப்பையும் அழித்து இலஞ்சம் மற்றும் ஊழல் மலிந்துவிட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அரச சேவையில் எந்த இடமும் சரிந்து விட அனுமதிக்கவில்லை என்றும் கூறிய ஜனாதிபதி, அதிகாரத்துவ பொறிமுறை மாற இன்னும் தயாராக இல்லாவிட்டால் இந்த மே மாதத்திற்குப் பிறகு அந்த அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் என்ற குற்றத்தால் இலங்கை உலக அரங்கில் பல தசாப்தங்களாகப் பின்னோக்கிச் சென்றுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல, மனிதாபிமான கடமை என்றும் வலியுறுத்தினார்.
சட்டத்திற்கு இணங்கும் மற்றும் சட்டத்திற்கு பயப்படும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அதற்கு போதனைகள், கருத்தரங்குகள் போதாது என்றும், ஒரு குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும் என்பதை நடைமுறையில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
கிராமத்தின் மண் சாலையில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல் குடிமகனின் கண்களை குருடாக்கும் மருந்துகளைக் கொண்டு வருவது வரையிலும், சாதாரண இடத்தில் ஆரம்பித்த இலஞ்சம் மற்றும் ஊழல் மிகவும் மனிதாபிதமற்ற தன்மை வரையிலும், உள்ளூராட்சி மன்றத்தில் இருந்து மத்திய வங்கியில் திருடும் நிலைமை வரையிலும் பரவியுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அந்த நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஆட்சியாளர்கள் பாதுகாப்பு வழங்கியதையும் நினைவுகூர்ந்தார்.
அரச நிர்வாக நிறுவனங்களிலும், சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களிலும் ஒரு சிலர் மற்றும் ஆயுதமேந்திய குற்றவாளிகள் அடங்கிய இலஞ்சம் மற்றும் ஊழல் புரியும் திருட்டு வளையம் ஒன்று உருவாகியுள்ளதாகவும் கூறிய ஜனாதிபதி, அது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கு தீர்வுகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டிலிருந்து ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க மாட்டோம் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு சுதந்திரம் பெற்ற இந்தியா ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் முன்னேறியதன் விளைவாக விண்வெளிப் பயணம் மற்றும் மென்பொருள் துறையில் ஒரு பெரிய தொழிலாளர் படையை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரசியல் அதிகாரத்தின் முடிவுகளால் 2022 இல் ஒரு திவாலான நாடாக மாறியது என்றும் கூறினார்.
மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்பேற்று, ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக அரங்கில் உயர்த்துவதற்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவ்வாறு செய்வதன் மூலம் நீதி வழங்கும் நிறுவனங்கள் குறித்து குடிமகனுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியும் என்றும், குற்றம் செய்து சட்டத்திலிருந்து தப்பிக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் கூறினார்.
“தேசிய ஊழல் எதிர்ப்பு 2025-2029 செயல் திட்டம்” நாட்டின் “நல்லொழுக்கமுள்ள தேசமாக” மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் தலைமையில் அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள்நாட்டு விசாரணை பிரிவுகளை உருவாக்கி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் அதை கண்காணிக்கக்கூடிய ஒரு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
கல்வி மற்றும் சமூக பங்கேற்பு, நிறுவன வலுவூட்டல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தத்திற்கு இடமளிக்கும் மூலோபாய முன்னுரிமை துறைகளுக்காக இந்த செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது மிகவும் முக்கியமான காரணியாகும். இலங்கையில், அந்த பொறிமுறையை மிகவும் வலுப்படுத்தும் முன்னணி அரசு நிறுவனமாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக் ஆணைக்குழுவை அடையாளம் காண முடியும். அதன்படி, இலஞ்சமற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக அனைத்து துறைகளிலும் செயல்படும் ஒரு வலுவான தேசிய ஊழல் எதிர்ப்பு கொள்கையை உருவாக்கும் அவசியம் அடையாளம் காணப்பட்டது.
இந்த தேசிய செயல் திட்டத்தை வரைவு செய்யும் போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக் ஆணைக்குழு, அனைத்து பங்குதாரர்களின் ஆதரவுடன் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியது. மூன்று மொழிகளிலும் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலம் ஊழல் பிரச்சினைகள் குறித்த பொதுக் கருத்தை மதிப்பிடுவதற்கான ஒரு விரிவான ஆய்வும் அதில் அடங்கும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், தனியார் துறை, சர்வதேச நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு தேவைகளைக் கொண்ட குழுக்கள், ஊடகங்கள், இளைஞர்கள், குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் வெளிநாட்டு அரசு அனுபவங்கள் மற்றும் அனைத்து மாகாணங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட பரிந்துரைகள் தேசிய செயல் திட்டத்தை வரைவு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிராக போராடும், ஊழலை வெறுக்கும் குடிமக்கள் கூட்டம், ஊழலுக்கு எதிராக போராட அனைத்து வகையிலும் ஆதரவளிக்கும் அரசியல் விருப்பம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து பின்புலங்கள் மற்றும் நல்லொழுக்கமுள்ள அரச சேவையுடன் அனைத்து துறைகளிலும் நல்லொழுக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு ஒரு நல்லொழுக்கமுள்ள நாட்டை உருவாக்க அனைவரின் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது.