35 ஆண்டுகளின் பின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி.

யாழ்ப்பாணம், வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாகச் செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதி கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.
அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்துக்குச் செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்குக்குச் செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாகப் போக்குவரத்துக்கு அனுமதிக்குமாறு போர் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் குறித்த வீதி இன்று வியாழக்கிழமை முதல் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது.
இந்த வீதி ஊடாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும்.
வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடை பயணம் செல்வதற்கும், பஸ் தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும் என்றும், சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் இன்று இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.