அமெரிக்க வரி குறித்து அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி இந்த கூட்டத்தை கூட்டினார்.
அமெரிக்காவின் புதிய வரி கொள்கை குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுவின் கருத்துக்கள் மற்றும் அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு விளக்கினார். குழுவின் பரிந்துரைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவது மற்றும் ஏற்றுமதி நாடுகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும், ஜனாதிபதி நியமித்த குழுவின் பரிந்துரைகளையும் ஒருங்கிணைத்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா, எஸ். ராசமாணிக்கம், ரவி கருணாநாயக்க, டி.வி. சானக்க, மனோ கணேசன், பழனி திகாம்பரம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன், டிலீத் ஜயவீர, ஜீவன் தொண்டமான், தயாசிறி ஜயசேகர மற்றும் ஏ. அர்ச்சுனா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். கயந்த கருணாதிலக, காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார் மற்றும் காதர் மஸ்தான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.