இந்திய பாரம்பரிய மருத்துவத்தை வெளிநாடுகளில் பரப்ப நடவடிக்கை.

இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுஷை, வெளிநாடுகளில் பரவலாக்கும் முயற்சியில், மத்திய ஆயுஷ் அமைச்சு ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சு, இந்திய மருத்துவ முறையான ஆயுஷை, உலக அளவில் மேம்படுத்தும் வகையில், ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி எனும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவத்திற்கான இருக்கைகளை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அமைத்து வருகிறது.
அவற்றின் வாயிலாக, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்துவது, ஆராய்ச்சி மையங்கள் அமைப்பது போன்ற பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பங்ளாதேஷ், ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், லாட்வியா, மலேசியா நாட்டு பல்கலைக்கழகங்களில், ஆயுஷ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக, குறுகிய கால, மத்திய கால படிப்புகளை அறிமுகப்படுத்துவது, அதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குவது, அந்நாடுகளில், இம்மருத்துவத்தை பரவலாக்கி, நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவற்றுடன், தொற்று நோய் பரவலின் போது, அந்நாடுகளில் மருத்துவ முகாம்களை அமைத்து, பாரம்பரிய முறைகளில், மருத்துவச் சேவைகள் அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, இதுவரை 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், ஆயுஷ் இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய ஆயுஷ் அமைச்சு தெரிவித்துள்ளது.