பட்டலந்த வதை முகாம் விவகாரம்: சட்டத்தின் பிரகாரம் ரணிலுக்கு எதிராக உரிய நடவடிக்கை.

“ஜே. ஆர். ஜயவர்த்தன அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதைப் போன்றுதான் அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார்.
அதன் பெறுபேறுதான் பட்டலந்த சித்திரவதை முகாமாகும். அவ்வாறிருக்கையில், 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை எமது கணக்கில் வைப்பிலிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்.
எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது . உண்மை நிச்சயம் வெளிவரும். சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“பட்டலந்த சித்திரவதை முகாமில் பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கவாதிகள் உட்படப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இது வெறும் அறிக்கையல்ல, இலங்கையின் ஹிட்டலர் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதம் என்றே அழைக்க வேண்டும்.
பட்டலந்த வீட்டுத் தொகுதிக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இளைஞர்களின் இரத்தம் மற்றும் உடலை ரணில் விக்கிரமசிங்க நிலத்துக்கு உரமாக்கினார். இந்தச் சித்திரவதை முகாமைப் போன்று நாடு முழுவதும் அரச ஆதரவுடன் பல சித்திரவதை முகாம்கள் காணப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்திரவதை முகாம்களுக்குத் தலைமை தாங்கினார்கள்.
உண்மைக்காகப் போராடியே பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள். அநீதியாகக் கொல்லப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதியை நாங்கள் பெற்றுக்கொடுப்போம். பட்டலந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பட்டலந்த விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணிப் பக்கம் திருப்புவதற்கு ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளது.” – என்றார்.
………….