பிகாரை உலுக்கிய கனமழை மற்றும் மின்னல்: 61 பேர் மரணம்

பிகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் பிகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழைக்கு 61 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 22 பேர் பலியுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பாட்னா, போஜ்பூர், ஷிவான் மற்றும் கயாவில் தலா நான்கு பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களில் தலா மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

இடியுடன் கூடிய மழைக்கு 21 பேரும், மின்னல் தாக்கியதில் ஒருவரும் பலியானதாக நாளந்தா மாவட்ட ஆட்சியர் சஷாங்க் பூபங்கர் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். உடற்கூராய்வுக்குப் பிறகு உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலைகளில் உள்ள மரக்கட்டைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்மா கிராமத்தில் வியாழக்கிழமை ஒரு கோயில் மீது மரம் விழுந்ததில் 6 பேர் பலியாகினர். மழையின் போது பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் தஞ்சம் புகுந்தனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பலியாகினர். இதனிடையே மழைக்கு பலியானோரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியையும் அவர் அறிவித்தார். மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அவசர காலங்களில் மட்டுமே வெளியே செல்லவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.