உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் புதியதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றியதால் சர்ச்சை!

உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் புதியதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
பதோஹியின் ஏகௌனி கிராமத்தில் அரசு நிலத்தில் அந்தக் கிராமத்தின் தலைவர் மற்றும் மக்கள் இணைந்து 2 அடி உயரமுள்ள மேடையில் நிறுவப்பட்ட 4 அடி உயர சிலையை வியாழக்கிழமை (ஏப்.10) திறந்து வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முறையாக அனுமதி பெறாமல் அந்தச் சிலையானது நிறுவப்பட்டதாகக் கூறி அப்பகுதியின் வருவாய்த் துறை அதிகாரி பிரதீப் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு 9 மணியளவில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
பலத்த பாதுகாப்போடு அந்தச் சிலையை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டபோது அதனை எதிர்த்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், காவல் துறையினர் அங்கு கூடியிருந்த மக்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலையச் செய்து அந்தச் சிலையை அகற்றினார்கள். தற்போது அந்தச் சிலையானது போலீஸாரின் கட்டுப்பாட்டில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தக் கிராமத்தின் தலைவர் வக்கீல் பிரசாத் மீதும் கிராமவாசிகள் சிலர் மீதும் பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு ஏராளமான காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.