“மூன்று மணி நேரத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தை கூட்டி, ஆவணங்களை தயார் செய்து எனக்கு சம்மனும் அனுப்பிவிட்டார்கள்.. ஆச்சரியமாக இருக்கிறது..”

விளக்கம் பெறுவதற்காக லஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் விடுத்த அழைப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் , இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக நான் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக லஞ்ச ஊழல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணையம் செயல்பட்ட அதிவேகமான விதம் வியப்பளிக்கிறது.
மேற்கூறிய அறிக்கை நேற்று முன்தினம் (10) மாலை ஆறு மணிக்கு ஊடகங்கள் மூலம் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. அன்றிரவு முதல் மறுநாள் அலுவலகம் திறக்கும் நேரம் வரை எந்த அதிகாரியும் ஆணையத்தில் பணிபுரியவில்லை என்பது உறுதியாகிறது.
ஆணையத்திற்கு அழைக்கப்படுவதற்கான கடிதம் 8வது நிறைவேற்று ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு நேற்று (11) மதியம் 12.30 மணியளவில் தான் கிடைத்தது. ஆணையத்தின் கட்டளைப்படி முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சில விஷயங்கள் தெளிவாகின்றன.
அறிக்கை வெளியாகி 18 மணி நேரத்திற்குள் லஞ்ச ஊழல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணையம் 8வது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.
அதிகாரிகள் பணியில் இல்லாத இரவு நேரத்தை கழித்தால், எல்லாமே சுமார் மூன்று மணி நேரத்திற்குள் நடந்திருக்கிறது. அந்த நேரத்தில் மேற்கூறிய அறிக்கை தொடர்பான ஆவணத்தை அதிகாரிகள் தயாரித்து, அதை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பி, உத்தரவு பிறப்பிப்பதற்காக ஆணையத்தையும் கூட்டியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
லஞ்ச ஊழல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணையத்தின் இந்த செயல்பாடு உலக சாதனைக்கு சமமானது. லஞ்ச ஊழல் ஆணையம் இதற்கு முன்பு இப்படி செயல்பட்டதில்லை.
ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு 8வது நிறைவேற்று ஜனாதிபதிக்கு சிங்கள இந்து புத்தாண்டு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் அவரது வழக்கறிஞர்களும் இந்த நேரத்தில் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால் வேறு திகதியை கோர நடவடிக்கை எடுக்கப்படும்.