ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நாணய சுழற்ச்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாட களமிறங்கிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வே 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் வெளியேறினர்.
பின்னர் களம் கண்ட விஜய் சங்கர் 29 ரன்களிலும், ராகுல் திரிபாதி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே ஒரு முனையில் நிதானமாக ஆடி வர மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. அஸ்வின் ஒரு ரன்னிலும், ஜடேஜா டக் அவுட்டிலும், இம்பேக்ட் வீரராக வந்த தீபக் ஹூடா டக் அவுட்டிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மகேந்திரசிங் தோனி 1 ரன்னில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் அடித்தது.
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் கண்டனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. பின்னர் இதில் டி காக் 23 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சுனில் நரைனுடன், ரகானே ஜோடி சேர்ந்தார்.
இதில் சுனில் நரைன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் 15 ரன்களுடன், அஜிங்யா ரகனே 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் சார்பில் அன்சுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கொல்கத்தா அணி தனது 3 வெற்றியை பதிவு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தொடர்ந்து 5 -வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது