தவறாக நாடுகடத்தல்: சிறையிலிருப்பவரை திருப்பியனுப்ப டிரம்ப்புக்கு உத்தரவு

அமெரிக்காவிலிருந்து தவறுதலாக நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆடவரைத் திருப்பி அனுப்பிவைக்குமாறு அமெரிக்க உச்ச நீதிமன்றம், அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
கில்மார் அப்ரெகோ கார்சியா என்ற அந்த ஆடவர், நிர்வாக முறைகளில் ஏற்பட்ட தவறால் எல் சல்வடோருக்கு நாடுகடத்தப்பட்டார் என்பதை டிரம்ப் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அவரைத் திருப்பிக் கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் மேல்முறையீடு செய்திருந்தது.
அதன் தொடர்பில், வியாழக்கிழமை (ஏப்ரல் 11) உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தடையை நிராகரிக்க மறுத்தது. அப்ரெகோ கார்சியாவை எல் சல்வடோரில் தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்க வகைசெய்யவும் அவர் தவறாக நாடுகடத்தப்படாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு எப்படிக் கையாளப்பட்டிருக்குமோ அவ்வாறே கையாளுமாறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமெரிக்க அரசாங்கத்துக்கு உத்தரவிட்டனர்.
எல் சல்வடோரைச் சேர்ந்த அப்ரெகோ கார்சியா, சென்ற மாதம் அமெரிக்காவிலிருந்து ஆகாயப் படை விமானங்களில் நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பலரில் ஒருவர். அவர், எல் சல்வடோரின் ‘பயங்கரவாதிகளுக்கான தடுப்புக் காவல் நிலையத்துக்கு’ (Cecot) அனுப்பப்பட்டார்.
மோசமான பெயரைக் கொண்டுள்ள அச்சிறையில் குண்டர் கும்பலைச் சேர்ந்தோரை வைப்பது வழக்கம். அமெரிக்கா, எல் சளல்வடோர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவ்வாறு செய்யப்பட்டுவருகிறது.