வரி விதிப்பு கொள்கை சிறப்பாகவே செயல்படுகிறது: டிரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக வரி விதித்ததை எதிர்த்து சீனாவும் அமெரிக்காவுக்கு எதிரான வரியை 125 விழுக்காட்டுக்கு உயர்த்தியது.
இதற்கிடையே, அமெரிக்கா, சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் முழுவீச்சில் போய்க்கொண்டிருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11ஆம் தேதி) பேசிய திரு டிரம்ப், தமது வரி விதிப்பு கொள்கை சிறப்பாக செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக சீனா பதிலுக்கு பதில் தரும் விதமாக வரி விதிப்பதை மேற்கொண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அமெரிக்க முறிப் பத்திரங்களை விற்று வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்க நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது, உலகச் சந்தைகள் அதிர்ச்சி அடைந்திருப்பதற்கு அடையாளமாக பங்குச் சந்தை அதிகம் ஏறுவதும் பின்னர் வீழ்ச்சியடைவதுமாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் பல வர்த்தக நாடுகளுடனான இறக்குமதி வரியை ஒரேயடியாக உயர்த்தினார். பின்னர், ஏப்ரல் 9ஆம் தேதியன்று திடுதிப்பென்று அவற்றை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்து 10 விழுக்காடு வரி மட்டும் விதித்தார். ஆனால், சீனப் பொருள்களுக்கு எதிரான வரியை மட்டும் உயர்த்தி அறிவித்தார்.
இது பற்றிக் கருத்துரைத்த டிரம்ப், “நமது வரி விதிப்பு கொள்கை சிறப்பாகவே செயல்படுகிறது,” என்று தமது டுருத் சோசியல் சமூக ஊடகத் தளத்தில் சீனாவுக்கு எதிராகக் கூடுதல் வரி விதித்தபின் பதிவு செய்தார்.
“அமெரிக்காவுக்கும் உலகுக்கும் மிகவும் விறுவிறுப்பான தருணம், அது வேகமாக செயல்படுகிறது,” என்றும் அவர் பதிவு செய்தார்.
இது குறித்து விளக்கிய அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை, சீனாவுடன் வர்த்தக உடன்பாடு ஏற்படுவதில் திரு டிரம்ப் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில், திரு டிரம்ப் மற்ற நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ள நிலையில், 15 நாடுகள் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக விளக்கியது.
“அமெரிக்கா தாக்கப்படும்போது பதிலடியாக அதைவிட பலமாக தாக்குதலைத் தொடுப்பேன் என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக இருக்கிறார்,” என்று பத்திரிகைத் துறைச் செயலாளர் திருவாட்டி கேரோலின் லியவிட் விளக்கினார்.
கடந்த வாரம் முதல் அமெரிக்காவும் சீனாவும் மிகவும் கடுமையான வர்த்தகத் தாக்குதலை ஒன்று மற்றொன்றின்மீது நடத்தி வருவது நினைவுகூரத்தக்கது.