அமெரிக்கா வரியை குறைக்கவில்லை என்றால் இலங்கை ஆபத்தில் – ADB

அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள 44% வரி அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்க வியாபாரிகள் சிலர் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆர்டர்களை ரத்து செய்யும் அபாயம் உள்ளது என்றும், அந்த வாங்குபவர்கள் வரி குறைவாக உள்ள நாடுகளை நோக்கி , அவர்களது பார்வை திரும்பும் சாத்தியம் உள்ளது என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.
அமெரிக்கா குறைவான வரி சதவீதத்தை விதித்துள்ள மெக்சிகோ, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு , இலங்கை பொருட்களை வாங்குபவர்கள் திரும்பும் வாய்ப்பு உள்ளது என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
44% வரி அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டால், குறிப்பாக இலங்கையின் ஆடை மற்றும் ரப்பர் ஏற்றுமதி குறையும் என்றும், உற்பத்தி திறன் குறைவதால் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தித் துறை மந்தமடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளது.
அதனால் முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதுள்ள நம்பிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால் இலங்கைக்கு வரும் நேரடி வெளிநாட்டு முதலீடு குறையக்கூடும் என்றும், நாட்டில் தொழிற்சாலைகளில் பணிநீக்கம் ஏற்படலாம் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் சமூக பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், அரசாங்கத்தின் ஏற்றுமதி வருவாய் குறையும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளது.