பிள்ளையானை தடுத்து விசாரிக்க 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’னிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் 2006 ஆம் ஆண்டு காணாமல் போனது தொடர்பான மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த விசாரணைகள் தொடர்பாக பிள்ளையான் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பு – 07, வித்தியா மந்திரில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து வெளியேறும் போது அதிபாதுகாப்பு வலயத்திற்குள் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் காணாமல் போனார்.
பேராசிரியர் ரவீந்திரநாத்துக்கு தொடர்ச்சியாக வந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் கொழும்பில் இருந்து தனது கடமைகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் அவர் இலங்கை விஞ்ஞான அபிவிருத்தி சங்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். 2006 டிசம்பர் 15 ஆம் திகதி அந்த கருத்தரங்கு முடிந்து வெளியேறியதில் இருந்து பேராசிரியரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விசாரணை பிரிவுகளுக்கு அறிவுறுத்திய பட்டியலில் பேராசிரியர் ரவீந்திரநாத் காணாமல் போன விடயமும் இருந்தது. தடுப்புக் காவல் உத்தரவு பெற்று பிள்ளையானிடம் இந்த கொடூரமான குற்றம் குறித்து விசாரிக்கப்படுகிறது. இந்த காணாமல் போதலில் அவர் முக்கிய சந்தேக நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.