யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் மரத்தடியில் காத்திருக்கும் அவலம்!

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும், அங்குள்ள வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
கிடைக்கும் அறிக்கைகளின்படி, விமானம் வரும் வரை பயணிகள் அருகில் உள்ள மரத்தடியில் கூட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இந்த விமான நிலையத்தை மீண்டும் திறக்க இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாயும், இந்திய உதவியாக 300 மில்லியன் ரூபாயும் செலவு செய்திருந்தது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தற்போது தினசரி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
47 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், முதல் பயணிகள் விமானம் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இண்டிகோ விமான சேவை , திருச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி தினசரி விமான சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இது நிகழ்ந்துள்ளது.
1960 மற்றும் 1970 களில் யாழ்ப்பாணம் மற்றும் சென்னை நகரங்களுக்கு இடையே 45 நிமிட பயண நேரத்தைக் கொண்ட விமான சேவை இருந்தது. பின்னர் வடக்கில் நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக அதன் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
விமான நிலையத்தில் ஒரு முனைய கட்டிடம், விமான கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு பிரிவு மற்றும் அலுவலக கட்டிட வளாகம் தற்போது கட்டப்பட்டுள்ளன. ஓடுபாதை 950 மீட்டரிலிருந்து 1,400 மீட்டர் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
பலாலி விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துவது ஆகியவற்றில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப , பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி உதவும் என்று அவர் அங்கு வலியுறுத்தினார்.